வாஷிங்டன்: 2024ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்த நாடுகள் வர்த்தகத்தில் சுருக்கம் கண்ட நிலையில், சராசரி வர்த்தக விரிவாக்கத்திற்கும் கூடுதலாக வளர்ந்து வரும் நாடுகளான, குறிப்பிடும்படியாக சீனா மற்றும் இந்தியா முன்னணியில் உள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு, மார்ச் தொடக்கம் வரையிலான தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டு உள்ள செய்தியில், உலகளாவிய வர்த்தகம் 2024-ம் ஆண்டில் 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விரிவாக்கம் கண்டுள்ளது. இது ஒட்டுமொத்தத்தில் 33 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் முடிவில், சேவை வர்த்தகம் 9 சதவீதம் அளவுக்கும், சரக்கு வர்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் வளர்ச்சி அடைந்து உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், சேவை மற்றும் சரக்கு சார்ந்த வர்த்தகம் உலக அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில், வர்த்தகத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒரு முக்கிய நாடாக அமெரிக்கா இருந்தபோதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வலுவான வர்த்தக செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளின் வர்த்தகம், அதிலும் ஏற்றுமதியில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ள தென்கொரியா ஏற்றுமதி வளர்ச்சியில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளர்ச்சி தொடர்ந்து நேர்மறையாகவே உள்ளபோதிலும், ஏற்றுமதி வளர்ச்சி எதிர்மறையான நிலையில் உள்ளது. ஜப்பான், ரஷியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசங்களில் காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் இறக்குமதி வளர்ச்சி ஆனது எதிர்மறையான நிலையிலேயே உள்ளது.
The post உலக அளவில் 2024ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன: ஐ.நா.அறிக்கை appeared first on Dinakaran.