* அழியும் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள்
* மண்ணை மலடாக்கி நிலத்தடி நீரை பாதிக்கிறது
* உற்பத்தி, பயன்பாட்டை தடுக்க வேண்டிய கட்டாயம்
* மீண்டும் மஞ்சப்பை திட்டத்தால் மக்கள் மனதில் மாற்றம்
வேலூர் : பிளாஸ்டிக் பொருட்கள் என்பது இன்று மனித வாழ்க்கையுடன் பின்னி, பிணைந்து அதை விட்டு விலக முடியாமல் செய்துள்ளது. கடந்த 1950ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை உலகில் உற்பத்தி செய்யப்பட்ட 9.7 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கில், 7 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளாக வெளியேற்றப்பட்டுவிட்டது. இவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு மற்றும் ரசாயனங்களை வெளியிடுகிறது. இவற்றை சாப்பிடும் விலங்குகளை மட்டுமின்றி, மண்ணின் சமநிலை, நீரின் சமநிலையை கூட அழிக்கின்றன.
குறிப்பாக, இன்று உலகம் முழுவதும் பெருங்கடல்கள், பிற கடல்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பழரச அலுமினிய டப்பாக்கள், நுரைப்பொருட்கள் என கடல் பரப்பில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஒவ்வொரு ஆண்டும் கடல் ஆமைகள் உட்பட 1 மில்லியனுக்கும் அதிகமான கடல் விலங்குகள் இறக்கின்றன என்று மதிப்பிடப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு தனிநபரும் 21 ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிற மக்கா கழிவுகளையும் கடலில் வீசுவதாக அமெரிக்காவில் வெளியான 2023ம் ஆண்டு புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.
இது கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி, மனிதனுக்கான கடல்சார் உணவுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கடல்சார்ந்து சூழலுக்கு உதவும் பவளப்பாறைகள் அழிவுக்கும், புவிவெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது. கடலில் உருவாகும் இத்தகைய எதிர்மறையான பாதிப்பு, ஒட்டுமொத்த பூவுலகின் இயக்கத்துக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர் சூழலியல் விஞ்ஞானிகள். அதேபோல் நிலத்தடி நீரை உறிஞ்சாதபடி மண்ணையும் மலடாக்கிவிடுகிறது பிளாஸ்டிக்.
இவ்வாறு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ‘பிளாஸ்டிக் ஆபத்தை’ தவிர்க்க எம்மாதிரியான நடவடிக்கைகளை உலகம் மேற்கொள்ளப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஏராளமான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதில் அடிமட்ட கடற்கரையை சுத்தம் செய்வது முதல் சர்வதேச ஒப்பந்தங்கள் வரை அனைத்தும் அடங்கும்.
இதில் சமீபத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒப்பந்தமாகும். இதன் அடுத்த கட்டமாக இந்த 2024ம் ஆண்டு இறுதிக்குள் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை எட்டிவிடும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கின. ஆனால், இதில் இறுதி முடிவை எட்டுவதில் சில முரண்பாடுகள் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக ஜீரோ வேஸ்ட் வட்ட பொருளாதாரத்துக்கு மாற வேண்டும், பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்பாட்டை தடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்.
அதேநேரத்தில் இந்தியாவில் தமிழகத்தில் 2019ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இத்தடையானது, 238 ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தித் தொழில்களை மூடுவதற்கு வழிவகுத்தது, அதே வேளையில், 725 சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் உற்பத்தியாளர்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.
இதன் மூலம் இதுவரை மாநிலம் முழுவதும் 2600 டன் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ₹19 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடைக்கு கூடுதலாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ‘மீண்டும் மஞ்சப்பை’- ‘பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான அழைப்பு’ என்ற தலைப்பில் ஒரு மாநில பிரச்சாரம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் 2021 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்தகைய ‘மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்,’ மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இதுவரை 2.2 லட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 19 அனிமேஷன் வீடியோக்கள் இதுவரை 60 ஆயிரம் பள்ளிகள் மற்றும் ஒன்பது ஆதி திராவிட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மக்கள் அதிகளவில் நடமாடும் 188 இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டு, இதுவரை 3.85 லட்சத்துக்கும் அதிகமான பைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் அந்த பைகளை மக்கள் பலமுறை தொடர்ந்து பயன்படுத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டை பெருமளவில் தவிர்த்துள்ளனர். அதேபோல் குழந்தைகளுக்கு சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி செல்வதை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய பிரச்னை – விஞ்ஞானிகள்
2050ம் ஆண்டளவில் கடலில் மீன்களை விட (எடையின் அடிப்படையில்) அதிக பிளாஸ்டிக் இருக்கும் என்றும், இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய பிரச்னையை சந்திக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மேலும் திமிங்கலங்கள் கடலில் மிதக்கும் மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்களை தினமும் உட்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரு நீலதிமிங்கலம் ஒரு நாளைக்கு சுமார் 10 மில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் உண்கிறதாம். இது உணவளிக்கும் பருவத்தில் 230 கிலோ முதல் 4 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கிற்கு சமம். தொலைந்த மீன்பிடி கியர், கோஸ்ட் கியர் இவை அனைத்தும் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கில் 20 சதவீதமாகும். பசிபிக் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்குகளில் பெரும்பாலானவை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சீனா மற்றும் தைவானுக்கு உரியவை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள்
பிளாஸ்டிக்கின் மூலப்பொருட்கள் பெட்ரோலியத்தில் இருந்து கிடைப்பவை என்பதால் சுற்றுச்சூழலில் எஞ்சியிருக்கும் பாதகமான விளைவுகளை கரைக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் அவை கரைந்து கொண்டே இருக்கின்றன. பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளும், உணவு பார்சல் செய்யப்படும் பிளாஸ்டிக் தட்டுகள் 500 ஆண்டுகளும், பெட் பாட்டில்கள் 400 ஆண்டுகளும் ஆகும். அதேபோல் நுரைப்பொருட்கள் 50 ஆண்டுகளும், அலுமினிய பொருட்கள் 200 முதல் 300 ஆண்டுகளும், ஒருமுறை தூக்கியெறியப்படும் குழந்தை டயப்பர்கள் 400 முதல் 500 ஆண்டுகளும், கண்ணாடி பாட்டில்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளும் எடுத்துக்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக் கண்டுபிடிப்பிற்கு 1850ல் பிள்ளையார் சுழி போட்டவர் அலெக்சாண்டர் பார்க்கர். 1855ம் ஆண்டு தொடங்கி 1862ம் ஆண்டுக்குள் அவர் கற்பூரம், நைட்ரோ செல்லுலோயிடை கொண்டு ஆரம்ப கால பிளாஸ்டிக்கை கண்டறிந்தார். தொடர்ந்து 1907ல் லியோபேக்லேண்ட் என்பவர் ஆரம்ப கால மின்சார சுவிட்ச்சுகளுக்கான பிளாஸ்டிக்கை உருவாக்கினார். தற்போது பிளாஸ்டிக் கார்பன், ைஹட்ரஜன், சல்பர், குளோரின் உட்பட பெட்ரோலிய பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
பசிபிக் குப்பை தொட்டி
நமது கடல்களில் மட்டும் தற்போது வரை 75 முதல் 199 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 33 பில்லியன் பவுண்டுகள் பிளாஸ்டிக் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு கடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உணவுச் சங்கிலியில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் முதல் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வரை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வியலை கடுமையாக பாதித்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய கடலாகவும், அமைதி கடலாகவும் பேசப்படும் பசிபிக் பெருங்கடல் பிளாஸ்டிக் கழிவுகளால் கிரேட் பசிபிக் குப்பைத்தொட்டி என்ற பெயரை பெற்றுள்ளது. அனைத்து வகையான கடல் குப்பைகள் மற்றும் 1.8 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகளை கொண்டுள்ளது. இது டெக்சாஸை விட இரண்டு மடங்கு பெரிய பகுதியாகும்.
The post உலக இயக்கத்துக்கு காரணமான பெருங்கடல்களை கபளீகரம் செய்யும் பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.