சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார். ஆனால் 12-வது சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார். இதனால் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். நேற்று ஓய்வு நாள் வழங்கப்பட்டிருந்தது. ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் 13-வது சுற்றில் டிங் லிரென் – குகேஷ் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.