லக்னோ: உ.பி.,யில் இன்று (டிச.26) நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் போலீஸ், உ.பி. அதிரடி காவல்படையினர் கூட்டாக இணைந்து இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட மூவரும் குருதாஸ்பூரில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது.
இது குறித்து பஞ்சாப் மாநில காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், “பிலிபித்தின் புரான்பூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குருதாஸ்பூர் தாக்குதலில் தொடர்புடையவர்கள். இந்த என்கவுன்ட்டர் பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் விடுதலை இயக்கத்துக்கு எதிரான மிக முக்கிய நடவடிக்கை. கொல்லப்பட்டவர்கள் குர்வீந்தர் சிங் (25), வீரேந்திர சிங் என்ற ரவி (23), ஜஸ்ப்ரீத் சிங் என்ற பிரதாப் சிங் (18) ஆவர். இவர்கள் அனைவருமே பஞ்சாப் மாநில குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர்களாவர்.” என்றார்.