சென்னை: ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (டிச.10) பேசுகையில், “உறுப்பினர் கே.பி.முனுசாமி இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாளை ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டிருக்கிறார். அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள், ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாகக் கொண்டாடப்படும் என்பதை நான் உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். முதல்வரின் அறிவிப்புக்கு அவையில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.