ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக உறை பனி விழத் துவங்கியுள்ளது. நீலகிரியில் நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனி விழத்துவங்கும். இந்நிலையில் இம்முறை கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்தது. இதன் எதிரொலியாக காலை நேரங்களில் நீர் பனி தான் பெய்தது. சில தினம் கழித்து உறைபனி விழ துவங்கி அதுவும் நின்று போனது. இந்நிலையில் நேற்று மற்றும் இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் லேசான உறைபனி பொழிந்தது. குறிப்பாக நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் லேசான உறைபனி விழுந்தது.
ஊட்டியில் தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம் மற்றும் கிளன் மார்க்கென் போன்ற பகுதிகளில் லேசான உறைபனி விழுந்தது. மேலும் ஊட்டி நகரில் வாகனங்களில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானத்தில் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வெப்பநிலை மிகவும் குறைந்தது. இன்று காலை ஊட்டியில் அதிகபட்சமாக 12 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இதனால் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
தேயிலைத் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். உறைபனி விழத் துவங்கியுள்ளதால், பனியிலிருந்து தேயிலை செடிகள் மலை காய்கறிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர். மேலும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்கவும் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஊட்டியில் மீண்டும் உறைபனி பொழிவு appeared first on Dinakaran.