பீஜிங்: எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம் என்று அமெரிக்க மோதலை முன்வைத்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது. இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளது.
இருபுறமும் சங்கடங்கள்.. உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும்படி அமெரிக்க நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணங்கி சீனாவின் நலனை விலையாக வைத்து ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் கடைசியில் அமெரிக்கா, சீனா என இருபுறம் இருந்து சங்கடங்களையே சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.