
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்1 பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர்-21 க்கு பிறகு புதிதாக எச்1 பி விசா கோரி விண்ணப்பிப்பவர்கள்தான் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, எச்1 பி விசா மறுக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னர் வழங்கப்பட்ட மற்றும் தற்போது செல்லுபடியாகும் எச்1 பி விசாக்களுக்கும், செப்டம்பர் 21 நள்ளிரவு 12:01 மணிக்கு முன்னர் விசா கோரி விண்ணப்பித்தவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது. மேலும், தற்போது எச்1 பி வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிப்பதை இந்த அறிவிப்பு தடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

