வாஷிங்டன்: அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மிகவும் திறமையான வெளிநாட்டினரின் பங்களிப்பு தேவை என்பதால் எச்1பி விசா நடைமுறையை நிறுத்த விரும்பவில்லை என்று புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகையில், ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லாரி எல்லிஸன், சாப்ட்பேங்க் சிஇஓ மசயோசி சன், ஓப்பன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்காவுக்கு மிகவும் திறமை வாய்ந்த இளைஞர்கள் தேவை. நான் பொறியாளர்களை பற்றி மட்டும் பேசவில்லை. எல்லா மட்டத்திலும் உள்ள மக்களைப் பற்றி பேசுகிறேன். தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி பிற வேலைகளுக்கும் திறமையான உயர்தர பணியாளர்களுக்கு எச்1பி விசா என்பது மிக அவசியமாக உள்ளது. தகுதி இல்லாத மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்த விசாவின் நோக்கம் என்றாலும் அதிக திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும், எலான் மஸ்க், லாரி, மயோசி போன்ற தொழில்நுட்பத் துறை தலைவர்களின் விருப்பமும் கூட.