வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். முன்னதாக டிரம்ப் தனது அரசு நிர்வாகத்தில் விவேக் ராமசாமி, ஸ்ரீராம் கிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய வம்சாவளிகளுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவுக்கு குடியேறும் இந்தியர்கள், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்திய வம்சாவளிகளின் நியமனத்திற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, தற்போதைய அதிபர் பைடனின் அரசியல் ஆலோசகரும் இந்திய வம்சாளியினருமான நீரா டாண்டன் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா, குடியேறிகளின் நாடு என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். இங்கு சட்டப்பூர்வ குடியேற்றத்தை விரிவுபடுத்த அமோக ஆதரவு உள்ளது. எதிர்காலத்தில் இது எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் பல ஆண்டாக இதில் எந்த மாற்றமும் இல்லாமல் ஆதரவு நீடிக்கிறது. எச்1பி விசா விவாதத்தில் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது துரதிஷ்டவசமானது. இதைப் பற்றி நான் சமூக ஊடகத்தில் பதிவிட்ட போது கூட என்னையும் இந்தியாவுக்கு திரும்பிப் போ என பதிலளித்தனர். இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும் போது இதை தவறு என நாம் சுட்டிக் காட்ட வேண்டும். இந்த விஷயத்தில் டிரம்பின் குடியரசு கட்சியில் உள்ள இந்திய அமெரிக்கர்களும் பேச வேண்டியது முக்கியம்’’ என்றார்.
The post எச்1பி விசா விவாதம் எதிரொலி குடியேறிகளின் நாடு அமெரிக்கா: நீரா டாண்டன் அதிரடி appeared first on Dinakaran.