“நான் ஒரு பெருங்கடல், நான் மீண்டு வருவேன்” என்று அன்று எடுத்த சபதத்தை இன்று நிறைவேற்றி இருக்கிறார் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ். தாக்கரேக்களின் தாக்கத்தை தாண்டி, மகாராஷ்டிர அரசியல் களத்தில் அவர் வெற்றிக் கொடி நாட்டிய பயணம் வியக்கத்தக்கது. அதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக, பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸை நியமிக்க அந்தக் கட்சி தலைமை முடிவு செய்தது. இதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆட்சேபம் தெரிவித்ததால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வந்தது. டெல்லி மேலிடப் பேச்சுவார்த்தை, சில பல ‘டீல்’களுக்குப் பிறகு முதல்வர் பதவி சஸ்பென்ஸ் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.