நெய்வேலி: என்எல்சி தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு இன்று காலை துவங்கியது.கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என மத்திய தொழிலாளர் நல துணை முதன்மை ஆணையர் சவுத்ரி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு துவங்கியது.
என்எல்சியில் மொத்தமுள்ள 6,800 தொழிலாளர்கள் வாக்களிக்கும் இந்தத் தேர்தலில் 6 தொழிற் சங்கங்கள் போட்டியிடுகின்றன. கடந்த 16ம் தேதி தொமுச, பாட்டாளி தொழிற்சங்கம், அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு, திராவிட தொழிலாளர் தொழிற்சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேட்புமனு தாக்கல் செய்தன. அதைத்தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள், என்எல்சி நிலக்கரி சுரங்கங்கள் அனல் மின் நிலையங்கள் நகரப் பகுதி போன்ற இடங்களில் தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தற்பொழுது முதன்மை சங்கமாக உள்ள தொமுசவுக்கு தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐஎன்டியுசி, மூவேந்தர் முன்னேற்ற தொழிற்சங்கம், தமிழக வாழ்வுரிமைச் சங்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்டவை ஆதரவு அளிக்கின்றன. இந்நிலையில் இன்று காலை முதல் ஷிப்ட் துவங்கும் 6 மணியிலிருந்தே என்எல்சியில் உள்ள 11 இடங்களில் தொழிலாளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு என்எல்சி ரகசிய வாக்கெடுப்பு தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் யார் என்பது இன்று இரவு தெரியவரும்.
The post என்எல்சி தொழிற்சங்க அங்கீகார தேர்தல் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு appeared first on Dinakaran.