சென்னை: எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் உடல் நிலை பாதித்தது போல் எந்த அறிகுறிகளும் இல்லை, எனவே பாலியல் சைக்கோ ஞானசேகரன் சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் தனக்கு வலிப்பு வந்தது போல் நடித்ததும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து மீண்டும் அவனிடம் அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம் தேதி இரவு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கடந்த 25ம் தேதி கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணிக்கடைக்காரரான ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் தனிப்படையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 3 பெண்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்டு சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 20ம் தேதி மாலை முதல் 7 நாள் காவலில் பாலியல் சைக்கோ ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஞானசேகரனிடம் அவனது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் யார் யார்? என்பது குறித்து வீடியோவை நேரடியாக ஞானசேகரிடம் காண்பித்து விசாரணை நடத்தினர். அப்போது நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஞானசேகரன் ‘கண்களை மேல் நோக்கி பார்த்த நிலையில் கை மற்றும் கால்களை அசைத்தப்படி வலிப்பு ஏற்பட்டது’.
இதனால் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஞானசேகரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கைதிகளுக்கான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஞானசேகரன்அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வலிப்பு நோய் தொடர்பாக டாக்டர்கள் ஞானசேகரனுக்கு தலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது, ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை என்று எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் மூலம் தெரியவந்தது. இதனால் குழப்பமடைந்த டாக்டர்கள் உடனே ஞானசேகரனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை மூத்த டாக்டர்களிடம் காண்பித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது தான் ஞானசேகரன் உடல் நிலை சீராக உள்ளது என்றும், விசாரணையை திசை திருப்பும் வகையில், அவர் வேண்டும் என்றே வலிப்பு வந்தது போல் நடித்தது தெரியவந்தது. பின்னர் டாக்டர்கள் ஞானசேகரன் உடல் நிலை குறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் டாக்டர்கள் அறித்த பரிந்துரைப்படி மீண்டும் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகரன் பல இளம் பெண்களுடன் ஒன்றாக இருந்த வீடியோவை காண்பித்து அவர்கள் யார் என்று கேட்ட போது தான் வலிப்பு வந்தது போல் நடித்துள்ளார். இதனால் மீண்டும் அவரிடம் அந்த வீடியோக்களில் உள்ள இளம் பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை; பாலியல் சைக்கோ ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நடித்தது அம்பலம் appeared first on Dinakaran.