சென்னை: ஏப்ரல் 25,26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துவதாக பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பை மீறி துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியாக உள்ளார்.
இதுகுறித்து, ராஜ்பவன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்கள் மாநாடு வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஏப்.25-ம் தேதி முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார்.
தேசிய கல்விக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விசார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்படவுள்ளன.
கல்வித்துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். ஒன்றிய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
இம்மாநாடு தமிழகம் முழுவதும் உள்ள மாநில, ஒன்றிய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதையும், உயர் கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஏப்ரல் 25,26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.