துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 2 இடங்கள் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 8 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் தரவரிசையில் பும்ரா 3-வது இடத்தில் இருந்தார். தற்போது 883 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா ஒரு இடத்தை இழந்து முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர். இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.