ஐக்கிய நாடுகள் சபை: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதை விரும்பாத நாடுகள் குறுகிய எண்ணம் கொண்ட, முற்போக்கான அணுகுமுறையை விரும்பாதவர்கள் என இந்தியா கடுமையாக தாக்கியது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், இந்தியா உள்ளிட்ட நாடுகளை நிரந்தர உறுப்பினராக்க வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சீனா தலைமையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ‘பன்முகத்தன்மையை நடைமுறைப்படுத்துதல், சீர்த்திருத்தம் செய்தல் மற்றும் உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பொது விவாதம் நடந்தது.
இதில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதேனேனி ஹரிஷ் பேசுகையில், ‘‘ஐநாவில் சீர்த்திருத்தங்களின் அவசியத்தை அழுத்தமாகவும் திட்டவட்டமாகவும் முன்வைப்பதில் இந்தியா முக்கிய குரலாக இருந்து வருகிறது. நமது உலகம் மாறிவிட்டது. ஐநாவும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். இன்னும் அது 1945ஐ பிரதிபலிக்கக் கூடாது. இந்தியாவும் மற்ற பிற நாடுகளும் ஐநாவின் நிரந்தர உறுப்பினர்களாக பிரதிநிதித்துவம் பெற தகுதியானவை.
ஆனால் ஐநாவை விரிவுபடுத்துவதை எதிர்க்கும் நாடுகள் குறுகிய எண்ணம் கொண்ட முற்போக்கான அணுகுமுறையை விரும்பாதவர்கள். இனியும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஐநாவில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும். அதன் பன்முகத்தன்மைக்கான முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும்’’ என அழைப்பு விடுத்தார்.
The post ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கத்தை விரும்பாதவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள்: இந்தியா கடும் தாக்கு appeared first on Dinakaran.