புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட ஓவர் வீசிய பவுலர்களில் ஒருவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. புதன்கிழமை (ஏப்.16) அன்று டெல்லி கேபிட்டல்ஸ் உடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி பேட் செய்தபோது கடைசி ஓவரை ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில் மொத்தம் 11 டெலிவரிகளை அவர் வீசினார்.
நான்கு ஒய்டு (Wide), ஒரு நோ-பால், நான்கு சிங்கிள், ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 19 ரன்களை அந்த ஓவரில் கொடுத்திருந்தார். இந்த ஆட்டத்தை சூப்பர் ஓவரில் வென்றிருந்தது டெல்லி அணி. ராஜஸ்தான் தோல்விக்கு ஒரு காரணமாக சந்தீப் சர்மாவின் கடைசி ஓவர் அமைந்தது. அந்த ஓவருக்கு முன்பு வரை 3 ஓவர்கள் வீசிய சந்தீப் சர்மா வெறும் 14 ரன்கள் மட்டும் தான் கொடுத்திருந்தார்.