சென்னை: ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இன்று சென்னை, ஓட்டேரி, அருள்மிகு ஆதி படவேட்டம்மன் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு, இந்து சமய அறநிலையத்துறையில் எண்ணற்ற திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் கூடுகின்ற பக்தர்களுக்கு ஏற்றார் போல் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என தொலைநோக்கு பார்வையோடு பக்தர்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தந்து வருகிறது.
இந்த அரசு ஏற்பட்ட பின், இதுவரை 2,504 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளதோடு, வருகின்ற 9 மற்றும் 10 தேதிகளில் 71 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திட அரசு ரூ.300 கோடியை மானியமாக வழங்கியுள்ளதோடு, திருக்கோயில் மற்றும் உபயதாரர்கள் நிதி ரூ.131 கோடியையும் சேர்த்து ரூ.431 கோடி மதிப்பீட்டில் 274 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று ஆய்வு செய்யப்பட்ட ஓட்டேரி, அருள்மிகு ஆதி படவேட்டம்மன் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளில் உபயதாரர்கள் மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொள்கின்றனர். இத்திருக்கோயிலுக்கு வருகின்ற மார்ச் 3ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கிற்கு இக்கோயிலின் சுற்றுபகுதியில் உள்ள 2,500 குடும்பங்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கி அழைப்பு விடுக்கப்படுவதோடு, குடமுழுக்கு அன்று 5,000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோயிலுக்கு சுமார் 9 கோடி ரூபாய் செலவில் தங்கத் திருத்தேர் உருவாக்கும் பணிகளை உபயதாரர் ஒருவரே செய்துதர உள்ளார். இப்படி பல்வேறு வகையில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு உபயதாரர்கள் உறுதுணையாய் இருந்து வருகின்றனர். 2024 -2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் 100 நகர்புறத் திருக்கோயில்கள் திருப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதை செயல்படுத்தும் வகையில் பல்வேறு சிறு திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 925 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,154 கோடி மதிப்பிலான 7,431 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநர் குழுவால் 11,261 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.5,515.54 கோடி மதிப்பீட்டிலான 23,234 திருப்பணிகள் துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,293 கோடி மதிப்பிலான பணிகளை செய்து தருகின்றனர்.
அதே நேரத்தில் திருக்கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள எண்ணிக்கை 7,154 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன நேற்றைக்குக் கூட வில்லிவாக்கத்தில் இருக்கின்ற ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டிருக்கின்றன அதேபோல் திருக்கோவிலுடைய நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டு இருக்கின்ற ஏக்கர் உடைய அளவு ஒரு லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர் அளவிடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன இதுவரையில் வல்லுனர் குழு உடைய ஒப்புதல் 11,261 திருக்கோவில்களுக்கு வல்லுனர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பரங்குன்றம் மலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். எங்களுடைய கண்ணோட்டத்தை பொறுத்தளவில் அதில் முழுக்க ஈடுபட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் என்று தான் நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன். ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகின்றனர். நேற்றைய அந்த போராட்டம் என்பது தேவையற்ற ஒரு போராட்டம். நான் பார்த்த வகையில் பல ஊடகங்கள் அந்த பகுதி மக்களின் பேட்டியை எடுத்து நாங்கள் அண்ணன் தம்பிகளாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்குள் எந்த விதமான பிரிவினையும் இல்லை என்றும், இந்த பகுதியை சாராத வெளியூரிலிருந்து வருபவர்கள் தான் இந்த பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள் என்றும், ஆகவே இது தேவையற்ற பிரச்சனை என்று அந்த மக்களே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். அப்படி என்றால் இந்த பிரச்சனையை தேவையற்ற ஒரு பிரச்சனையாக தான் நாங்கள் கருத வேண்டி இருக்கின்றது.
திருப்பரங்குன்றம் திருக்கோயிலை பொறுத்த அளவில் நேற்றைக்கு அங்கே ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்று பிரிவுகளை ஏற்படுத்த நினைத்தார்கள். வட மாநிலங்களில் வேண்டுமென்றால் இதற்கு உண்டான சாத்திய கூறுகள் அமையக்கூடும். எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் எங்கள் முதல்வர் எங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இருக்கின்றார். நீங்கள் வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். இங்கே இருக்கின்ற முதல்வர் உறுதிமிக்க முதல்வர், இரும்பு மனிதர். எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கின்றார். ஆகவே இந்த பெரியார் மண்ணில், திராவிட மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்.
திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தளவில் 1920 ஆம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றமும், 1930 ஆம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சிலும் ஒரு உத்தரவை வழங்கி இருக்கின்றது. அதைத்தொடர்ந்து 1958, 1975, 2004, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்றன. 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த கடந்த காலங்களில் எந்தெந்த அடிப்படையில் ஏழு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு வழங்கியதோ அந்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்றார்போல் தான் இந்த அரசு அதை மதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை வைத்து அரசியல் குளிர்காயலாம் என்று இந்த பிரச்சனையை கையில் எடுப்பவர்களுக்கு சொல்லிக் கொள்வது, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு செயல்படும் இந்த அரசு நீதிமன்றம் என்ன வழிகாட்டுகின்றதோ அதன்படி தான் செயல்படும்.
முதலமைச்சர் அவர்கள் அனுமதியோடு கூடிய விரைவில் துறையின் அமைச்சர் என்ற வகையில் அந்த மலைக்கு செல்ல இருக்கின்றேன். திருக்கோயில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பினருக்கும் வழிபாட்டு முறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீதிமன்ற உத்தரவு அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு வருகின்றன. அங்கே இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மச்சான்களாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் அவர்களை அன்னியப்படுத்தி அதன் மூலம் தேர்தலில் லாபம் காணலாம் என்று நினைக்கின்றார்கள். இந்த பிரச்சனையில் அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளால் மக்கள் வெகுண்டெழுந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நேற்றைக்கு அங்கே கூடிய கூட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு மதத்திற்கு ஒரு இனத்திற்கு எதிராக தான் கோஷங்களை போட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுப்புள்ளவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற பாரதிய ஜனதாவில் இருப்பவரே ஒலிபெருக்கியை பிடித்து மதத்தால், இனத்தால் மக்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம். ஏற்கனவே என்ன வழிபாட்டு நெறிமுறைகள் இருந்ததோ என்ன வழிபாட்டை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அதுவே தொடரும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றார்.
உள்ளாட்சி தேர்தலில் கூட பிரதிநிதியாக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் நீதிமன்றங்களை தேவையில்லாத போது தலைக்கு மேலே இருக்கின்றதை காட்டி இதற்கு சமம் என்றும், தேவை இருக்கின்றபோது நீதிமன்ற தீர்ப்பை ஆஹா ஓஹோ என்றும் பேசும் இரட்டை நாக்கு படைத்தவர். இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று தான் அவருடைய நோக்கம். அவர் ஒரு மனிதனே அல்ல. ஆகவே அவருடைய கூற்றுக்களை எடுத்து இது போன்று விஷம பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று பத்திரிகை நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
பழனி, தைப்பூசத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 20,000 நபர் வீதம் 10 நாட்களுக்கு இரண்டு லட்சம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.செந்தில் குமார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போதிராஜன் மேம்பாலத்தை பொறுத்த அளவில் நான் 2001 -ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, போதிராஜன் நகர், சீனிவாசபுரம் போன்ற பகுதிகள் உள்ளடக்கிய பகுதிக்கு ரயில்வே டிராக் செல்கின்றதால் குறுகலாக இருந்ததால், மேம்பாலம் அமைக்க அண்ணா பல்கலைக் கழகம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், மின்சார கேபிள்கள் அதிகளவில் செல்கின்றன.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் நானும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் நேரு அவர்களும், சட்டமன்ற உறுப்பினரும் போதிராஜ நகர் பணியினை துவக்கி வைத்தோம். இந்த மேம்பாலத்தை பொறுத்தளவில் ரயில்வே கிராசில் வருகின்ற இடங்களில் ரயில்வேயினுடைய பணியும் இருக்கின்றது. ஆகவே, ரயில்வே எடுத்துக்கொண்ட பகுதி பணி முடித்த பிறகு தான் மாநகராட்சி பணிகளை தொடங்க வேண்டியது இருக்கின்றது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் ஆய்வினை மேற்கொண்டு விரைந்து முடிப்பதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் கடந்த காலங்களில் திட்டமிடல் இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிதாக 22 பணிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். வாரம் ஒரு முறை இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் அந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். நிச்சயம் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் போல் அந்த பேருந்து நிலையமும் மக்களுக்கு அதிக அளவு பயன் தரும் என்பதை நம்புகிறோம் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., சென்னை மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மண்டல அலுவலர் எ.எஸ்.முருகன், மாநகராட்சி உறுப்பினர் எஸ். தமிழ்செல்வி, திருக்கோயில் செயல் அலுவலர் எம்.ஆச்சி சிவபிரகாசம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.