கடந்த காலங்களில் 19 சதவீதம் நிதி குறைப்பு செய்யப்பட்டதால், தமிழகத்துக்கு சுமார் ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025-ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசியதாவது: சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பொருத்தவரையில் மாநில அரசுக்கு 50 சதவீதம், மத்திய அரசுக்கு 50 சதவீதம் என நிதி பகிரப்படுகிறது. 15 -வது நிதிக்குழுவானது மத்திய அரசு தொகுப்பில் இருந்து 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும் 41 சதவீதம் நமக்கு கிடைத்து இருக்கிறதா என்றால் அது இல்லை. அது 33 சதவீதம் என்ற அளவிலே இருந்துள்ளது. அந்த 33 சதவிகிதத்தில் தமிழகத்துக்கு கிடைத்து இருப்பது வெறும் 4.07 சதவிகிதம்தான். ஆனால் அதேநேரத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு 17.9 சதவீதம், பீகாருக்கு 10 சதவீதம் கிடைத்துள்ளது.