கடன் வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. கடன் வழங்கும் ‘ஆன்லைன் ஆப்’ களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. தற்போது கடன் வழங்கும் தனிநபர்கள் இந்த வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத கடன் வழங்கும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரைஅபராதம் விதிக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கி விட்டு அதை வசூலிப்பதற்காக குடும்பத்தினரை மிரட்டுதல், சட்டவிரோதமாக துன்புறுத்துதலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.