*நகர்மன்ற தலைவர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
கம்பம் : கமப்ம வீரப்பநாயக்கன்குளம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, நகர்மன்ற தலைவர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கம்பம் நகரின் கிழக்கு பகுதியில் நன்செய் நிலங்களின் பாசன ஆதாரமாக இந்த வீரப்பநாயக்கன் குளம் அமைந்துள்ளது. பெரியாறு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழை நீர் மற்றும் கம்பம் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் குளத்தில் சங்கமகின்றன.
இதன் மூலம் இப்பகுதியில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் சேனை ஓடை மற்றும் சாக்கடை கால்வாய் மூலம் நேரடியாக குளத்தில் கலப்பதால் தற்போது குளம் மாசு அடைந்துள்ளன.
மேலும் குளத்தில் மண்மேவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் குளம் முழுவதும் ஆக்கிரமிப்பால், இதே நிலைமை நீடித்தால் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாது. மேலும், கழிவு நீரை மட்டும் வைத்து விவசாயம் செய்ய முடியாது. எனவே நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்த பிறகு குளத்தில் விட வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியனிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் குளம் அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்திகரித்து குளத்திற்குள் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கம்பம் நகரில் இருந்து கழிவு நீர் வெளியேறி குளத்தில் கலக்கும் இடங்களில் நாள் ஒன்றுக்கு கழிவு நீர் எவ்வளவு கலக்கிறது என்ற கணக்கெடுப்பை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் வீரப்பநாயக்கன்குளம் பகுதியில் கழிவு சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆணையாளர் உமா சங்கர், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார், சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அந்த இடத்தை நகராட்சிக்கு ஒதுக்கீடு செய்வதற்கு பொதுப்பணித் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், மேலும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது குளம் மாசு படுவது தவிர்க்கப்படும் என்றனர்.
The post கம்பம் வீரப்பநாயக்கன்குளம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு appeared first on Dinakaran.