தியாகராஜநகர்: கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிளகாய் விளைச்சல் அபாரமாக உள்ளது. இதற்கு நெல்லை மொத்த விற்பனை சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழச்சியடைந்துள்ளனர்.
அன்றாட சமையலில் காரம் வகை உணவு தயாரிப்பில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண மிளகாய் மற்றும் குண்டு மிளகாய் இருவகை மிளகாய் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல கிராமங்களில் விளைவிக்கப்படுகிறது. 3 மாத அறுவடை பருவம் உடைய இந்த மிளகாய் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டிருந்தனர். இவை நன்கு வளர்ந்து தற்போது 2ம் கட்ட அறுவடை நடைபெறுகிறது.
இந்த மிளகாய் நல்ல தரமாக விளைந்து இருப்பதால் இவற்றை விவசாயிகள் நெல்லை தச்சநல்லூரில் உள்ள மொத்த காய்கனி விற்பனை சந்தைக்கு கொண்டு வந்து விற்கின்றனர். இங்குள்ள வியாபாரிகள் தரமான இந்த மிளகாயை விவசாயிகளிடம் ஒரு கிலோவிற்கு ரூ.35 முதல் ரூ,.40 என்ற விலையில் கொள்முதல் செய்கின்றனர்.
உள்மாவட்ட காய்கறி கடைகளுக்கும் கேரளாவுக்கும் இவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மிளாகாய் சில்லறை விற்பனையில் ரூ.60 முதல் ரூ,70 வரை விலை போகிறது. கொள்முதல் விலை ஓரளவு திருப்திகரமாக இருப்பதால் மிளகாய் விளைவித்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post கயத்தாறு பகுதியில் விளைச்சல் அபாரம்; நெல்லை சந்தையில் மிளகாய் நல்ல விலை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.