சோளிங்கர்: சோளிங்கர் அருகே கரும்பு தோட்டத்தில் இருந்து 2 ஐம்பொன் சிலைகளை அதிகாரிகள் இன்று காலை மீட்டனர். இதனை கோயிலில் இருந்து யாரேனும் திருடிவந்து மறைத்து வைத்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடி ஊராட்சி புளியமங்கலம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதேபோல் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் கரும்பு வெட்டும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது கரும்பு தோட்டத்தின் நடுவில் சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன 2 தீபாலநாயகியம்மன் சிலைகள் இருந்தன. இதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக விஏஓ தரணிஹரிக்கு தெரிவித்தனர். அவர் சோளிங்கர் தாசில்தார் செல்வி, வருவாய் ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோருக்கு தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் 2 சிலைகளை கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். அவற்றை சோளிங்கர் கருவூலத்தில் ஒப்படைத்து தொல்லியல் துறைக்கு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சிலைகளை அருகே உள்ள ஏதாவது கோயிலில் இருந்து மர்மநபர்கள் திருடி வந்து இங்கு மறைத்து வைத்தார்களா? அல்லது எப்படி இங்கு வந்தது என்றுபோலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கரும்பு தோட்டத்தில் 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு: சோளிங்கர் அருகே இன்று பரபரப்பு appeared first on Dinakaran.