*விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்
*புதுப்பித்து தர கோரிக்கை
நிலக்கோட்டை : ஆத்தூர் அருகே கலிக்கம்பட்டிக்கு செல்லும் கிராம சாலைகள் மிகவும் சேதமடைந்து கிடப்பதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த சாலைகளை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கலிக்கம்பட்டி ஊராட்சி. இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சின்னாளபட்டி பேரூராட்சிக்கு மிக அருகில் உள்ளதால் கலிக்கம்பட்டி ஊராட்சியின் தென்பகுதியிலும் குடியிருப்புகள் அதிகம் வர துவங்கியுள்ளன. மேலும் இங்கு கல்வி நிலையங்களும் அதிகம் அமைக்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலை, சின்னாளபட்டி நகர், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து கலைமகள் காலனி, முன்னிலைகோட்டை, ஆலமரத்துப்பட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக கலிக்கம்பட்டிக்கு வர வேண்டும்.
இந்த பிரதான சாலை தற்போது ஜல்லிக்கற்கள் முழுவதுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதுதவிர ஆங்காங்க சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும் ஆரம்பத்தில் 12 அடி அகலமாக இருந்த சாலை தற்போது முட்புதர்கள் சூழ்ந்து 5 அடியாக குறுகியுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் அடிக்டி விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துகள் நடக்கின்றன.
இதேபோல் கலிக்கம்பட்டி கிராமத்திலிருந்து முன்னிலைக்கோட்டை கிராமத்துக்கு செல்லும் சாலையும் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இச்சாலையின் பல இடங்களில் ஜல்லிக்கற்கள் முழுவதுமாக பெயர்ந்து இது தார் சாலையா இல்லை மண் சாலையா என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் மழை பெய்யும் காலங்களில் இந்த இரு சாலைகளை பற்றி சொல்லவே வேண்டாம். இன்னும் மோசமான நிலைக்கு சென்று விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கலிக்கம்பட்டியை சேர்ந்த பாரதிராஜா என்பவர் கூறியதாவது: கலிக்கம்பட்டி கிராம சாலையிலிருந்து கலைமகள் காலனி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் இச்சாலையில் பயணிக்கவே மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மழை பெய்யும் நேரத்தில் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சின்னாளபட்டியில் இருந்து கலிக்கம்பட்டி, கோட்டைப்பட்டி, முன்னிலைக்கோட்டை செல்லும் கிராம சாலைகளை உடனடியாக புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post கலிக்கம்பட்டியில் கண்டமாகி கிடக்கும் சாலைகள் appeared first on Dinakaran.