தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதிய பிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்ற திருத்தங்களை அந்த சட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் கேளிக்கை வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.
எனவே அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 சதவீதம் வீதத்தில் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகுந்த வழிமுறைகளை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.
The post கல்வி நிறுவனங்களில் இசை நிகழ்ச்சி நடத்தினால் 10 சதவீத கேளிக்கை வரி: சட்டமசோதா தாக்கல் appeared first on Dinakaran.