சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராய மரணங்கள் நிகழ்ந்தவுடன் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் நீதி கிடைக்கவும் உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அக்குழுவும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. குற்றத்தோடு தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்;
17 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை வேகமாக நடந்து இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருப்பது வழக்கின் வேகத்தை தாமதப்படுத்தும். சிபிஐ விசாரணையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பது மேலும் தாமதமாகும். அதற்கு பல சான்றுகள் உண்டு; பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைக்கவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைப்பதில் அக்கறை இல்லாத பழனிசாமி விஷச்சாராய மரணங்களை வைத்து அருவருக்கத்தக்க அரசியல் செய்து வருகிறார். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு பயந்துபோய் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டாம் என தடை உத்தரவு வாங்கிய பழனிசாமி இன்று சிபிஐ விசாரணை கோருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. அரசின் மேல்முறையீட்டு முடிவை எதிர்த்து மலிவு அரசியல் செய்யும் பழனிசாமிக்கு வன்மையான கண்டனம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் விவகாரம் அரசின் மேல்முறையீட்டு முடிவை எதிர்த்து மலிவு அரசியல் செய்வதா? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் appeared first on Dinakaran.