பெத்லகேம்: காசாவில் ஓயாத போரால் தொடர்ந்து 2வது ஆண்டாக பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட களையிழந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் யாருமின்றி மேங்கர் சதுக்கம் வெறிச்சோடி காணப்படுகிறது. இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகமே தயார் நிலையில் உள்ளது. ஆனால், இயேசு பிறந்த இடமாக நம்பப்படும் பெத்லகேம் மட்டும் எந்த கொண்டாட்டத்திற்கான அறிகுறியின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடக்கும் போரால் கடந்த ஆண்டே பெத்லகேமுக்கு எந்த சுற்றுலா பயணிகளும் வரவில்லை. இதனால் கடந்த ஆண்டே பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. ஆனால் அடுத்த ஆண்டாவது தங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என காத்திருந்த பாலஸ்தீன மக்களின் எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை. காசா போர் 15 மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதால் இந்த ஆண்டும் பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏதுவுமின்றி களையிழந்து காணப்படுகிறது. இங்குள்ள மேங்கர் சதுக்கத்தில் பெரிய கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்படவில்லை.
நினைவுப் பரிசுகள், பாரம்பரிய கைவினைப் பொருட்களை வாங்க ஆளில்லை. சதுக்கத்தை சுற்றி உள்ள கடைகள் காற்று வாங்குகின்றன. கொரோனாவுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெத்லகேமுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் உலகின் பல இடங்களில் இருந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்திற்கும் குறைவான மக்களே வந்துள்ளனர். இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என அங்குள்ள மக்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். பெத்லகேம் நகரில் 5,500 ஓட்டல்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்துமே காலியாக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் கூறி உள்ளனர். ஓட்டல்களில் தங்குபவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகி விட்டது.
* பாலஸ்தீனர்கள் வெளியேற கூடாது
நேட்டிவிட்டி தேவாலய பாதிரியார் இசா தால்ஜி கூறுகையில், ‘‘இங்கு பல குடும்பங்கள் நிதி ரீதியாக சிரமப்படுகின்றனர். வாடகை, பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. யாருக்கும் வருமானம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்குவது அல்லது விடுமுறையை கொண்டாடுவது மிகவும் குறைவு. அவர்களுக்கு தேவாலயம் சார்பில் நாங்கள் உதவுகிறோம். ஆனாலும், தேவைகள் நிறைய உள்ளன. பலர் பெத்லகேமை விட்டு வெளியேறிவிட்டனர். இப்படிப்பட்ட சவால்கள் இருந்த போதிலும், பாலஸ்தீனர்கள் தொடர்ந்து பெத்லகேமில் வசிப்பதை ஊக்குவிப்பதே இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தின செய்தியாக வைக்க விரும்புகிறோம். இயேசு பிறந்த போது இருள் மறைந்து ஒளி பிறந்தது. எனவே நாம் காத்திருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். நம் வேர்களுடன் நாம் இருக்க வேண்டும். நம் வேர்கள் பெத்லகேமில் உள்ளன’’ என்றார்.
The post காசாவில் ஓயாத போரால் பெத்லகேமில் 2ம் ஆண்டாக களையிழந்த கிறிஸ்துமஸ்: வெறிச்சோடி கிடக்கிறது மேங்கர் சதுக்கம் appeared first on Dinakaran.