ஜெருசலேம்: காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் மேற்கொண்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ அறிவித்துள்ளார். 3 பெண் பிணை கைதிகளின் பெயரை ஹமாஸ் வெளியிட்ட நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. டிரம்ப் கொடுத்த எச்சரிக்கையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட 15 மாதங்களாக நடத்திய தொடர் தாக்குதலில் (இன்றுடன் 470 நாட்கள்) காசாவில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 46,700க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். காசா போரில் ஹமாஸ் தீவிரவாதிகள் 17,000 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தன. இதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீன சிறைக் கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும், காசாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளவும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி முன்னிலையில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி (நாளை) பதவியேற்க உள்ளார். முன்னாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், தான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் ஹமாஸ் தீவிரவாதிகள் மோசமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது தூதர் ஸ்டீவ் விட்ஃகாப், ஹமாஸ் – இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் ஏற்பட தற்போதைய அதிபர் ஜோ பைடன் குழுவினருடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய கிழக்கில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். நன்றி!’ என்று கூறியுள்ளார். ஹமாஸ் -இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. முன்னதாக போர் நிறுத்தம் மற்றும் பிணையக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனால் ஹமாஸுடனான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
The post காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் மேற்கொண்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு appeared first on Dinakaran.