சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காணும் பொங்கலை முன்னிட்டு டிரோன் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் கண்காணித்து, கடற்கரை பகுதிகளில் காணாமல் போன 19 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.
16.01.2025 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா மற்றும் கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் மேற்பார்வையில் 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய கடற்கரைகளில் சிறப்பு கட்டுப்பாட்டறைகள் மற்றும் மணற் பரப்புகளில் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைத்தும், மணற்பரப்புகளில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கண்காணித்தும், டிரோன் கேமராக்கள் மூலம் சிறப்பு கட்டுப்பாட்டறைகளில் கண்காணித்தும், ரோந்து வாகனங்கள், மணற்பரப்பில் செல்லக்கூடிய Beach Buggies வாகனங்கள், குதிரைப்படை மற்றும் ரோந்து காவலர்கள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும், திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எதுவும் நிகழாமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடினர்.
மேலும் கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் Wrist band அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டு, கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோரிடம் விவரங்கள் பெற்று இந்த அடையாள அட்டைகளில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி கடற்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால், D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 10 குழந்தைகள், D-5 மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 05 குழந்தைகள், J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 02 குழந்தைகள் மற்றும் J-8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாங்கரை கடற்கரை மணற்பரப்பில் காணாமல் போன 02 குழந்தைகள் என மொத்தம் காணாமல் போன 19 குழந்தைகள் சென்னை பெருநகர காவல் குழுவினரால் உடனடியாக மீட்கப்பட்டு, பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
The post காணும் பொங்கலில் கடற்கரைகளில் காணாமல் போன 19 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.