சென்னை: தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப்படும் என காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை (3.0) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: இன்று உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்தித்து வருகிறது.
இதற்கு ஒரே காரணமாக காலநிலை மாற்றத்தைத் தான் சொல்ல முடியும். இதை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கு முதல் தேவை, பிரச்சினையின் தீவிரத்தை உணர்வது. தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப்படும். காலநிலைக் கல்வியறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்க இருக்கிறோம். எல்லோருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமே அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.
பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத் தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால், பாதிப்படையக் கூடிய வேளாண்மை, நீர்வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும். வெப்ப அலையை மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால், ரூ.4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறோம்.
வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வெப்ப அலை தாக்கத்தின்போது, தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்கவும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறோம். இயற்கை வளங்களைப் பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாறவேண்டும்.
இயற்கைப் பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொண்டு, மீண்டெழக்கூடிய சமூகமாக வளரவேண்டும். பசுமைத் தொழில்நுட்பங்கள் மூலமாக பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தக்கூடிய சமூகமாகவும், உலகளாவிய காலநிலைக் குறிக்கோள்களை அடைய உறுதுணையாக இருக்கும் சமூகமாகவும் எதிர்காலத்தில் நாம் திகழவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளர் செந்தில்குமார், இயக்குநர் ராகுல்நாத், தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் எரிக் சொல்-ஹெய்ம், சவுமியா சுவாமிநாதன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, மிதா பானர்ஜி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, எம்எல்ஏ பிராபகர் ராஜா, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.