சென்னை: சட்டப் பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா மற்றும் கே.மாரிமுத்து ஆகியோர் பேசியதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு அளித்த பதில், பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்கள் உரையாற்றுகிறபோது deposit பெற்று பொதுமக்களை ஏமாற்றுவோர்மீது கடும் நடவடிக்கையை எந்தளவிற்கு எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற வினாவை எழுப்பியிருக்கிறார்கள். அதற்காக ஒரு விளக்கத்தை நான் சொல்ல விரும்புகிறேன். அதற்காக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி பொதுமக்கள், ஏற்கெனவே ஏமாந்திருக்கக்கூடிய பொதுமக்கள் இன்னும் அவர்கள் விழிப்புணர்வுகூட ஏற்படாமல் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறார்களே என்ற வருத்தத்தோடு சுட்டிக்காட்டும் அதேநேரத்தில், நமது அரசால் பெருமளவில் அதைக் கட்டுப்படுத்தி ஓரளவிற்குக் குறைத்திருக்கிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
டெபாசிட் பெற்று பொது மக்களை ஏமாற்றியுள்ள நிறுவனங்களைப் பொறுத்தமட்டில், கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் 97 கோடியே 41 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டு டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு ஆண்டுகளிலேயே 102 கோடியே 96 இலட்சம் ரூபாய் டெபாசிட்தாரர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. அஇஅதிமுக ஆட்சியில் ஏமாற்றிய நிறுவனங்களின் 854 கோடியே 74 இலட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 2,670 கோடியே 89 இலட்சம் மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட சொத்துக்களை முடக்கும் அரசு ஆணைகள் அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் 53. ஆனால், கழக ஆட்சியில் 108 அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல; அஇஅதிமுக ஆட்சியில் 103 கோடியே 24 இலட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே attachment செய்யப்பட்ட நிலையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொதுமக்களை ஏமாற்றிய நிறுவனங்களின் 319 கோடியே 29 இலட்சம் ரூபாய் சொத்துகள் attach செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்து deposit பெற்று ஏமாற்றியிருக்கக்கூடிய நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்க இந்த அரசு முன்பிருந்த அ.இ.அ.தி.மு.க. அரசைவிட தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் உறுப்பினருக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் K. மாரிமுத்து உரையாற்றுகிறபோது பெண் காவலர்களுக்கான திட்டங்களைப் பற்றிக் கேட்டார். பெண் காவலர்களுக்கு இந்த ஆட்சியிலே பல்வேறு சலுகைகள், பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். கணவரும் காவல் துறையில் பணியாற்றினால், அவருடைய கணவரும் காவல் துறையில் பணியாற்றினால், அந்தப் பகுதியில் பணியிட மாறுதல் வழங்கக்கூடிய அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.
மகப்பேறு விடுப்பு முடித்து பணிக்குச் சேரும்போது, மூன்றாண்டுகளுக்கு விரும்பிய ஊரில் பணியிட மாறுதல் வழங்கக்கூடிய அந்தத் திட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி) கருவுற்றிருக்கும் காலத்தில் சீருடை அணிவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) பெண் காவலர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வசதியும் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிவறை வசதி என்ற அந்த நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப் பல்வேறு வகைகளிலும் பெண் காவலர்களுடைய நலனில் அக்கறை கொண்டுதான் செயல்பட்டு வருகிறோம் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் மூலமாக இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
The post காவல் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்!! appeared first on Dinakaran.