சென்னை: காஷ்மீரில் சிக்கிய 28 தமிழ்நாடு சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் சிகிச்சைக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 28 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. அவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக அந்த மாநிலத்தில் சுற்றுலா சென்றுள்ள பயணிகள் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தங்கள் ஊர்களுக்கு திரும்பி செல்ல உள்ளனர். இதனால் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.இந்த நிலையில், 28 பேரும் ஸ்ரீ நகரில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகள் மூலமாக தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் ஜம்மு காஷ்மீர் விரைந்தார்.
அவர் நேற்று இரவு டெல்லி சென்று அங்கிருந்து ஸ்ரீ நகர் விமான நிலையத்துக்கு செல்ல உள்ளார். ஸ்ரீ நகருக்கு செல்லும் அவர் அங்கு சிக்கி உள்ள 28 பேரை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளார். 28 பேரும் தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிக்கு செல்ல வேண்டும். டெல்லி, மும்பை வழியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து அவர்களை நேரில் சந்தித்து கேட்டறிகிறார். ஸ்ரீ நகரில் 3 தமிழர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று கொண்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து நேரடியாக சந்திக்க உள்ளார் அப்தாப் ரசூல். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சொந்த இடமாக கொண்டவர் அப்தாப் ரசூல். இதன் காரணமாக அவரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரையுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அவர் செல்கிறார்.
The post காஷ்மீரில் சிக்கிய 28 தமிழ்நாடு சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை..!! appeared first on Dinakaran.