இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உலகின் மிக உயர்ந்த பனிமலையான இமயமலை மட்டுமின்றி, சிறிய, பெரிய அளவிலான மலைகள், ஏற்ற, இறக்கத்துடன் கூடிய பள்ளத்தாக்குகள், ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. இதனால் இங்கு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து தருவதே சவாலான காரியமாக உள்ளது.