சென்னை: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிச. 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த பண்டிகை நாளை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள், தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து, வீட்டை விளக்குகள் மற்றும் தொங்கும் மாலைகளால் அலங்கரித்து வருகின்றனர். தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மதமாற்ற தடை சட்டம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் பாஜ அரசு ஈடுபட்டிருக்கிறது. இதன்மூலம், சிறுபான்மையின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அச்சுறுத்தப்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது. மிக சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
வைகோ (மதிமுக): வெறுப்பவர்களையும் நேசிக்க சொன்ன இயேசு கிறிஸ்துவின் அமுதமொழியை மனதில் கொண்டு இந்தியாவின் மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் இந்நாளில் உறுதி மேற்கொள்வோம். அன்பையும் பரிவையும் கனிவையும் நேசத்தோடு சக மனிதர்களிடம் பிரதிபலிக்கும் உணர்வுடன் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக): இயேசுபிரான் விரும்பியதை போல, உலகில் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அதன் மூலம் உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி, பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்தநாளில் உறுதி ஏற்போம்.
திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): இந்திய திருநாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கல்வி முன்னேற்றம் மற்றும் மருத்துவ நலன்களுக்கு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பாதிரியார்கள், சகோதரர்கள், கன்னியாஸ்திரிகள் ஆற்றி வரும் தொண்டு அளப்பரியது, பாராட்டுக்குரியது. உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன்.
அன்புமணி (பாமக): அனைவரும், அன்பு, உதவி, கருணை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, நல்லிணக்கம் ஆகியவற்றை அனைவருக்கும் வாரி வழங்குவோம். அவை பல்கி பெருகி இந்த உலமே அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும் என்று கூறி அனைவருக்கும் கிறித்துமஸ் வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன் (தமாகா): அனைவரிடமும் அன்போடும், சகோதரத்துவத்தோடும், சகிப்புத்தன்மையோடும் அவற்றிற்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் இயேசு கிறிஸ்து. அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன், ஏனெனில் அன்பே கடவுள் என்று கூறினார். ஆகவே எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம், சகோதரத்துவத்தை வளர்ப்போம்.
வேல்முருகன் (தவாக): உலகம் முழுவதும் அன்பு, கருணை, ஆனந்தம் ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பியவர் இயேசுபிரான். மனிதர்களிடத்தில் மட்டுமின்றி மற்ற உயிர்களிடத்திலும் பாசத்தையும், கருணையையும் வெளிப்படுத்தியவர். உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
எர்ணாவூர் நாராயணன்: கிறிஸ்துமஸ் என்றாலே அன்பையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரு விழா. இயேசு கிறிஸ்து போதித்ததை போலவே ஒருவர் மீது அன்பு கொண்டு மகிழ்ச்சியாய் வாழ இந்நாளில் வாழ்த்துகள்.
சரத்குமார்: பகை, வெறுப்பு, படுகொலை, கொள்ளை என கால மாற்றத்திற்கு ஏற்ப சமூக சீர்கேடுகள் பெருகி வரும் வேதனையான இந்த காலக்கட்டத்தில் அனைவரிடமும் சமாதானம் பெருகவும், எண்ணங்கள் சீர்பெற்று, சமூகம் நலம் பெறவும் இந்த இனிய நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்சி): உலகில் பாவங்களை ரட்சிக்கவும், அனைவருக்கும் அன்பை போதிக்கவும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வும் மன்னிக்கும் மனபக்குவத்தையும் உருவாக்கவும் இயேசு கிறிஸ்து பாடுபட்டார். அவருடைய போதனைகள் மக்களுக்கு அமைதியை போதித்தது. அவருடைய நற்குணங்களையும், பண்புகளையும் ஏற்றுக்கொண்ட மக்கள் அவரை கடவுளாக போற்றி வருகிறார்கள்.
ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி): ஏழை, எளிய ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு, பார்வையற்றோர், வாய் பேசமுடியாத கேட்கும் திறனற்றவர்கள், தொழுநோயாளிகள் என சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேவகுமாரன் பிறந்தநாளில் பிரார்த்தனை செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன.
பிரசிடென்ட் அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேஷன்): அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் கொடுத்து வளமான வாழ்க்கையை உருவாக்கட்டும். நட்சத்திரம் நம் வீடுகளில் ஜொலிப்பது போல உள்ளங்களிலும் வாழ்விலும் ஜொலிக்கட்டும். அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ரெ.தங்கம் (மாற்றுத்திறனாளர் முன்னேற்ற சங்கம்): முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளர்களின் வாழ்வியலில் முன்னேற்றத்தை தந்து வருகிறார். இயேசுவின் வாழ்வியல் சகோதரத்துவ சிந்தனைகளை ஏற்போம். கிறிஸ்துமஸ் நன்னாளில் மாற்றுத்திறனாளர்கள், தங்களுடைய வாழ்வில் அன்பும் அமைதியும் அறிவார்ந்த ஆற்றலும் வளம் மிகுந்த வாழ்வியல் முன்னேற்றமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
மு.பன்னீர்செல்வம் (தமிழ்நாடு ஐஎன்டியுசி): போட்டி, பொறாமைகள் ஒழிய வேண்டும். மனித நேயம் தழைக்க வேண்டும். இதை கடைப்பிடித்து ஏழ்மை அகல வேண்டும். கல்லாமை, இல்லாமை நிலை உருவாகவேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற இயேசு பிரான் போதித்த போதனைகள்படி நடந்தால் எந்நாளும் நன்நாளாக அமையும். அதுவே வாழ்க்கையின் வெற்றியாகும்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், சசிகலா, டி.டி.வி தினகரன், பிரேமலதா, இந்திய கிறிஸ்துவ மதசார்பற்ற கட்சியின் தலைவர் மார்டின், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, கோகுல மக்கள் கட்சி நிறுவனர் சேகர் யாதவ், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஹென்றி, விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம், விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகல கொண்டாட்டம் அன்பு, கருணை, சகோதரத்துவம், மகிழ்ச்சி நல்லிணக்கத்தை அனைவருக்கும் வாரி வழங்குவோம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.