கோவை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு ஸ்டார்களை தொங்க விடுவது, குடில்கள் அமைப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கேக் தான். கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் தங்களது நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் வாங்கி கொடுப்பது வழக்கம். இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில் கேக் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
டன் கணக்கில் கேக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் பேக்கரிகளில் கேக் விற்பனை சூடுபிடித்துள்ளது. பிளம் கேக் வகைகள் கால் கிலோ அளவில் சிறிய அளவிலான பாக்ஸ்களில் பேக்கிங் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இதுதவிர, பிளாக் பாரஸ்ட், சாக்லேட் கேக், ஸ்ட்ராபெரி கேக், ப்ரூட் கேக், கீரிம் கேக் உள்பட பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், கால் கிலோ பிளம் கேக் ரூ.120க்கும், கிலோ ரூ.480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், டீ கேக் கால் கிலோ ரூ.100, பட்டர் கீரிம் கேக் வகைகள் கிலோ ரூ.400 முதல் ரூ.460க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, கேக் கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஒரு கிலோ கேக் வாங்கினால் அரை கிலோ இலவசம் என அறிவித்து கேக்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கேக் விலையில் மாற்றம் இல்லை எனவும், கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட விலையில் கேக் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பேக்கரி விற்பனையாளர்கள் தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டை விட அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கேக் விற்பனை சூடுபிடித்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
The post கிறிஸ்துமஸ் முன்னிட்டு கேக் விற்பனை ஜோர்: பிளம் கேக் கிலோ ரூ.480க்கு விற்பனை appeared first on Dinakaran.