கூடுவாஞ்சேரி : கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்கைவாக் கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள் அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் கிளம்பாக்கம் பேருந்து நிலையமாகும்.
இங்கு பல லட்சம் மக்கள் இங்கிருந்து பேருந்து மூலம் தென்மாவட்டம் மற்றும் வட மாவட்டம் என பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வருகிறார்கள். மேலும் சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இங்கிருந்து பயணம் செய்கின்றனர்.
இங்கு பயணம் செய்யும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்கள் பல அத்தியாவசிய பணிகளை சிஎம்டிஏ நிர்வாகம் செய்து வருகிறது.அதில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் அமைக்கப்படும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மட்டுமல்லாமல் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு ஸ்கைவாக் அமைக்கும் பணிகளை சிஎம்டிஏ நிர்வாகம் தொடங்கியது.
ஆனால், ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது. மேலும், இந்த ஸ்கைவாக் பணியின் காரணமாக ரயில் நிலைய பணிகளும் முடியும் தருவாயில் எட்டி தற்போது அந்த பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. காரணம் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் 50 மீட்டருக்கு மேலாக ஸ்கைவாக் பணிக்காக எடுத்துள்ளது. இப்பணி முடிவடையாததால் அங்கிருந்து கேபிள் வேலைகள் மற்றும் மின்சார வேலைகள் என பல வேலைகள் தடைப்பட்டு இருக்கிறது.
ஸ்கைவாக் பணி தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே அடுத்த 4 முதல் 8 நாட்களுக்குள் ரயில்வே பணிகள் முழுவதுமாக முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு விடவும் முடியும் என்றும், எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு ஒரு கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
The post கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் முடிவடையும் நிலையில் மந்தகதியில் நடந்து வரும் ஸ்கைவாக் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.