அறிமுகமான 2022-ம் ஆண்டு சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று வியக்கவைத்த குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. தொடர்ந்து இரு முறை அசத்தியதால் 2024-ம் ஆண்டு அந்த அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சீசன் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த அணியின் உத்வேகம் அளிக்கக்கூடிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வளைத்து போட்டது.
எனினும் புதிய கேட்டனாக ஷுப்மன் கில்லை நியமித்து 2024-ம் ஆண்டு சீசனை குஜராத் டைட்டன்ஸ் அணி சந்தித்தது. ஆனால் 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. இதனால் இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் இலக்கு பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பதாக இருக்கக்கூடும். இதற்கு தகுந்தவாறு அணியை பலப்படுத்தும் விதமாக மெகா ஏலத்தில் அதிரடி முடிவுகளை குஜராத் அணி உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.