சென்னை: கன்னியாகுமரி வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள நிகழ்ச்சிகள் குறித்த விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்ட 10 விரைவுப் பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, டிச.31, ஜன.1 தேதிகளில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.