சென்னை: செஸ் உலகில் முதல் முறையாக, டெக் மஹிந்திரா மற்றும் ஃபிடே இணைந்து குளோபல் செஸ் லீக் தொடரை நடத்தி வருகிறது. இதன் 3-வது சீசன் வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்குகிறது. முதன்முறையாக இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. ஆனால் போட்டியை நடத்தும் நகரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தத் தொடரில் இளம் வீரர்கள் கலந்து கொள்ளும் வகையில் ‘குளோபல் செஸ் லீக் காண்டெண்டர்ஸ் 2025’ என்ற உலகளாவிய தொடர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 11 வரை ஆன்லைனில் நடைபெறுகிறது.
அமெச்சூர் மற்றும் தொழில்முறை வீரர்கள் கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த போட்டி பல நிலைகளைக் கொண்டது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான பதிவு நேற்று (ஆகஸ்ட் 28-ம் தேதி) தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://contenders.globalchessleague.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆடவர், மகளிர், யு-21 என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இந்த 3 பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்கள் குளோபல் செஸ் லீக் 3-வது சீசனில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.