வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆவார். தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய சுந்தர் பிச்சை கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவை வழிநடத்தினார். இவரது திறமையால் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இப்பதவிக்கு வந்து தற்போது சுந்தர் பிச்சை 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் மிக நீண்ட காலம் உயர் பதவியை சுந்தர் பிச்சை வகித்து வருகிறார்.
சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 லட்சம் கோடி) அதிகமான உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. துறையில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது. இதன்காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை கூகுள் வழங்கி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்துள்ளது. மேலும் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீசுவரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகும். இந்த சாதனையை சுந்தர் பிச்சை நிகழ்த்தி தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலை நாட்டி உள்ளார்.
The post கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியது appeared first on Dinakaran.