கூடலூர்: கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. தொடர்ந்து கூடலூர் குசுமகிரி குடியிருப்பு பகுதிகள் வழியாக சென்ற யானை, காவல் நிலையம் மற்றும் தனியார் பள்ளி இருக்கும் பழைய கோர்ட் சாலை வழியாக கூடலூர் சங்கம் ரவுண்டனா பகுதிக்கு வந்தது. பின்னர், அங்கிருந்து வலது புறமாக ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி ஓடியது. சிறிது தூரம் ஓடிய யானை சாலையின் நடுவில் இருந்த தடுப்பை கடந்து அங்குள்ள சிறிய நடைபாதை வழியாக கோத்தர்வயல் பகுதிக்கு சென்றது.
யானை நடமாட்டம் அறிந்து பின் தொடர்ந்த போலீசார் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து வந்த வனத்துறையினர் அந்த யானையை அங்கிருந்து விரட்டி சென்று சில்வர் கிளவுட் வனப்பகுதிக்குள் துரத்தினர். முன்னதாக, யானை சாலையில் ஓடி வருவதை பார்த்த வாகன ஓட்டி வாகனத்தை பின்னோக்கி வேகமாக இயக்கி யானையிடம் சிக்காமல் உயிர் தப்பினார்.
நகரின் மையப்பகுதியில் அதிகாலை நேரத்தில் யானை நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதேபோல, தொரப்பள்ளியை அடுத்துள்ள முரனிவயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானைகள், அங்கு வசிக்கும் மாணிக்கம் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல் வயல்களை சேதப்படுத்தி உள்ளன.
The post கூடலூர் நகரில் அதிகாலையில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு: நெல் வயல்களை சேதப்படுத்தியது appeared first on Dinakaran.