கோவை: தேர்தல் கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற வார்த்தையையே நான் எங்கும் கூறவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக கூட்டணி வேண்டாம் என்றவர்கள், தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் கிடைக்கிறார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது, தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளரும் தெளிவாக விளக்கியுள்ளோம். கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை. நான் கூறியதையும், அதிமுக பொதுச் செயலாளர் கூறியதையும் திரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் நிலையைப் பற்றி நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். அதிமுகவைப் பற்றி அதன் பொதுச் செயலாளர் தெளிவாகப் பேசியுள்ளார். நான் டிபேட்டுகளை (தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்) பார்ப்பதில்லை.