சென்னையில் ஒழிக்கவே முடியாத பிரச்சினையாக கொசு தொல்லை உள்ளது. சென்னை மாநகரில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்கள் உள்ளன. இவற்றிலும், பெரும்பாலான மழைநீர் வடிகால்களிலும் 365 நாட்களும் கழிவுநீர் தேங்குவதால், அவற்றில் கொசு உற்பத்தியாகி, ஆண்டு முழுவதும் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிப்ரவரி- மார்ச், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளுக்குள் கொசு வலை அமைத்திருந்தாலும், வாயில் கதவை திறக்கும்போது, கொசுக்கள் உள்ளே வந்துவிடுகின்றன. படுத்து உறங்கும்போது, வலைகள் மீது படும் கை, கால்களையும் கொசுக்கள் பதம்பார்த்து விடுகின்றன. ரத்தத்தை உறிஞ்சிய கொசுக்கள் பறக்க முடியாமல் தரையில் விழுந்து கிடக்கின்றன. தூங்கி எழும் மக்கள் அதை மிதித்து வீடெங்கும் ரத்த கறையாக காட்சியளிக்கிறது. கொசுத் தொல்லையால் குறிப்பாக வட சென்னை மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.