புதுடெல்லி: ஆம் ஆத்மியில் இருந்து விலகும் முடிவு திடீரென எடுத்தது கிடையாது. மதிப்புகளும் கொள்கைகளும் நீர்த்துப் போவதைக் கண்டதால் தைரியத்தை திரட்டிக்கொண்டே வெளியே வந்தேன் என்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய கைலாஷ் கெலாட், நேற்று (திங்கள்) பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கைலாஷ் கெலாட், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறும் முடிவு ஒரே இரவில் எடுக்கப்பட்டது அல்ல. மிக நீண்ட காலத்துக்குப் பிறகே இது நிகழ்ந்தது. சில விஷயங்களை புரிந்து கொள்ள நேரம் தேவைப்பட்டது. சில மதிப்புகள் மற்றும் கொள்கைகளோடு நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவை நீர்த்துப்போவதை பார்த்ததால் தைரியத்தை திரட்டிக் கொண்டு வெளியே வரும் முடிவை நான் எடுத்ததாகவே கருதுகிறேன். என்னைப் போலவே பலர் ஆம் ஆத்மியில் இருக்கிறார்கள். தைரியம் இல்லாதவர்கள் அங்கேயே தொடருவார்கள்” என தெரிவித்தார்.