கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் கடுங்குளிரால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு கோடை விழா மற்றும் தொடர், வார விடுமுறை நாட்களில் கூட்டம் களைகட்டும். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் வருகை தருவர். நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், தூண் பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் செல்வது வழக்கம்.
இங்கு நவம்பர், டிசம்பர் குளிர்காலத்தில் வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படும். மேலும் உறைபனியும் பரவி கிடக்கும். இந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படும். எனினும் குளிர் சூழலை ரசிக்க விரும்புவோர் இங்கு வருவார்கள். பின்னர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனி மெல்ல மெல்ல குறைய துவங்கும். அப்போது சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய பின்னரும் தற்போது வரை கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் சீசன் தொடர்வதால் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில் இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியும் கூட்டம் சமாளிக்க முடியாமல் இருந்த நிலையில், குளிர் சீசனில் சுற்றுலாப்பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு குறைவாகவே உள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் தொடர் குளிர் சீசன் காரணமாக கொடைக்கானல் நகரில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகளும் முடங்கியுள்ளன.
The post கொடைக்கானலில் விடாமல் கொட்டும் பனியால் கடுங்குளிர்: சுற்றுலா தலங்கள் ‘வெறிச்’ appeared first on Dinakaran.