சீல்டா: கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை ஜன.20ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.