*விரைந்து குடோனுக்கு மாற்ற கோரிக்கை
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவில் குடோனுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் அறுவடை காலம் தொடங்கி விவசாயிகள் பலர் தங்களது நிலத்தில் பயிரிடப்பட்ட நெல்மணிகளை அறுவடை செய்து வருகின்றனர். பின்னர், அந்த நெல்மணிகளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசின் நிர்ணயித்த விலையில் விவசாயிகள் நேரடி விற்பனை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சிவில் சப்ளை குடோன்களுக்கு மாற்ற ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்து செல்லப்படுகிறது.
ஆனால், போதுமான அளவுக்கு லாரிகள் இல்லாததால், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமாகி உள்ளது. இதனால் மற்ற விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைப்பு விடும் நிலைக்கு தள்ளப்படுவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவில் குடோன்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.