சென்னை: கோடைகாலத்தில் மின்தடை இல்லாத நிலையை கடைப்பிடிக்க தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உடன்குடி அனல்மின் திட்டம் நிலை- 1ல் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி காலன்குடியிருப்பில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்வர் எரிசக்தி முழுமையாக நம்முடைய தேவைக்கு இருக்க வேண்டும். அதே போல் புதிய திட்டங்களின் மூலமும் மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக இந்த உடன்குடி திட்டத்தை விரைவாக முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
₹13,077 கோடி மதிப்பீட்டில் 3 கட்டங்களாக இப்பணி அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 600 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட மின் எந்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் முறையாக தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் இந்த இயந்திரம் அமைக்கப்படுகிறது. சுமார் 8 கி.மீ தொலைவிற்கு கடல் உள்ளே நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு அதிலிருந்து நிலக்கரியை கொண்டு உயர்மட்ட ராட்சத இரும்பு கம்பிபாலம் அமைக்கும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. இந்த பாலம் வழியாக ராட்சத கண்டெய்னர் மூலம் கடலில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி நேரடியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் முதல் யூனிட்க்கான பணிகள் முடிவடைந்து மே மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த மின் தேவையினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வெளி மின்சந்தை மின்பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் வாயிலாக எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் திருராம்குமார், மேற்பார்வையாளர்கள் பாண்டியராஜன், ராஜேந்திரன், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக உதவி இயக்குநர் மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
The post கோடைகாலத்தில் மின்தடையில்லா நிலைக்காக நடவடிக்கை: மின்வாரிய தலைவர் தகவல் appeared first on Dinakaran.