சென்னை: கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்க கோயில்களில் தற்காலிக பந்தல்கள், தேங்காய் நார் விரிப்புகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மோர் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கோடை வெயிலின் தாக்தத்திலிருந்து பக்தர்களை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் எந்த வகையிலும் தீப்பிடிக்காத வகையில் பாதுகாப்பான தற்காலிக கீற்றுப் பந்தல்கள் அமைத்தல், கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள், வெப்பத்தை தடுக்கின்ற வெள்ளை நிற பெயிண்ட் அடித்தல், நடைபாதைகளில் வெப்பத்தை குறைத்திடும் வகையில் அவ்வபோது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஒரு சில இடங்களில் நீர்மோர், எலுமிச்சை பானகம் போன்றவை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் நிகழ்வுகளை பார்த்திருப்பீர்கள். அதில் கோபப்பட்டு அதிகமாக கத்தியவர் எதிர்க்கட்சி தலைவர் தான். ஆனால் எங்கள் முதலமைச்சர் அனைத்தையும் உணர்ந்து ஐம்புலன்களை அடக்கி சர்வசாதாரணமாக இந்த சட்டமன்ற கூட்டத் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்து காட்டினார். முதல்வருக்கு பயம் என்பது என்னவென்று தெரியாது. அவர் உறுதியாக நிற்பார், ஒன்றியத்திற்கு எந்த வகையிலும் அடிபணிந்து செல்லாத ஆற்றல் வாய்ந்த இரும்பு மனிதர் எங்கள் முதல்வர்.
ஆனால் ஒரே நாளில் அமித்ஷா வந்து இங்கே உட்கார்ந்து அவருடைய ஆளுமையை எடப்பாடி அவர்களுக்கு எவை எல்லாம் காட்டி பணிய வைக்க முடியுமோ அதையெல்லாம் காட்டி பணிய வைத்து ஒரே நாளில் கூட்டணியை உறுதி செய்து விட்டு சென்றார். ஆகவே எடப்பாடிக்குதான் பயம் வயிற்றிலும் தெரிகிறது கண்ணிலும் தெரிகிறது. எங்கள் முதலமைச்சர் கண்ணை பார்த்தால் 1,000 வாட்ஸ் மின்சாரம் அவர் கண்ணில் இருந்து புறப்படுகின்றது. இதில் எதிரிகள் 2026ல் பொசுங்குவார்கள்.
தமிழிசையை பொறுத்தவரை பிரதமர் மோடியின் வழியிலே செயல்பட்டு தன்னைத்தானே புகழ்ந்து கொள்கின்றவர். முதல்வருக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா என்பது அரசோ அல்லது தி.மு.க.வோ எடுத்த பாராட்டு விழா அல்ல, அனைத்து பல்கலைக்கழகங்களாலும் எடுக்கப்பட்டதாகும். முதல்வர் பாராட்டை விரும்பாதவர். பேசுகின்றபோது பாராட்டை நான் எங்கும் புறக்கணிப்பவன், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கேட்டுக் கொண்டதால் இசைந்தேன் என்று குறிப்பிட்டார். ஒன்றியத்திற்கு தேவைப்படுகின்ற ஒரு வழிகாட்டுதலை தன்னுடைய சட்டப் போராட்டத்தால் உறுதியான நடவடிக்கைகளால் ஆளுகின்ற அரசை தவிர்த்து எதிர்க்கட்சி ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இன்னல்களை விளைவிக்கும் ஆளுநர்களுக்கு ஒரு குட்டை வாங்கி கொடுத்தவர்
ஒன்றியத்திற்கே வழிகாட்டியவர் எங்கள் முதல்வர் என்பதால் தான் பாராட்டு விழா நடத்தப்பட்டது. காலம் முழுவதும் தூக்கி வைத்து முதல்வரை கொண்டாடுகின்ற, போற்றுகின்ற வகையில் பாராட்டுகள் அமைய வேண்டும். இது ஒரு நாளோடு நின்று விடக்கூடாது. தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வயிற்று எரிச்சல். அக்னி வெயில் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் அதிக வெப்பத்தோடு வார்த்தைகளை கக்குவார். நாங்கள் குளிர்ந்த காற்றை தேடி நடந்து கொண்டிருக்கின்றோம். மக்களை குளிர்ச்சியாக அழைத்துச் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post கோடை வெயிலில் இருந்து பக்கதர்களை காக்க கோயில்களில் தற்காலிக பந்தல், தேங்காய் நார் விரிப்பு: குடிநீர், மோர் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு, அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.