புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக பதான்யூ மசூதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து மகா சபை தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 3-ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுல்தான்கள் ஆட்சியிலிருந்த டெல்லியின் கீழ் பதான்யூ அமைந்திருந்தது. சுல்தான் வம்சத்தின் மன்னரான குத்புதீன் ஐபக்கிற்கு பின் அவரது மருமகன் இல்துமிஷ் டெல்லியை ஆட்சி செய்தார். அப்போது அவர் பதான்யூவில் பிரம்மாண்ட ஜாமா மசூதியை 1225-ல் கட்டினார். ஒரே சமயத்தில் 23,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் இந்த மசூதி உள்ளது. டெல்லியின் ஜாமா மசூதியை அடுத்து நாட்டின் மிகப்பெரிய மசூதியாகவும் உள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) பராமரிப்பின் கீழ் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் பட்டியலில் பதான்யூ மசூதி உள்ளது. நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இம்மசூதியில் தற்போது 5 வேளை தொழுகை நடைபெறுகிறது.